திடீரென்று அம்மா இறந்துவிடுகிறார், ஜெயிலில் இருக்கும் தனக்கு பிடிக்காத அண்ணன் கரிகாலனுக்கு கூட சொல்லாமல், நாமே இறுதிச்சடங்கை செய்துவிடலாம் என்று திட்டம் போடும் தம்பி கோவலன். அப்பாவுக்குத்தான் இளையமகன், அம்மாவிற்கு மூத்தமகன் தான் கொல்லி வைக்கவேண்டும் என்று குறுக்கே நிற்கும் அண்ணனின் நண்பர்கள்.
அண்ணன் கரிகாலனுக்கும் தம்பி கோவலனுக்கும் அப்படி என்னதான் பிரச்சினை என்பதாக திரைக்கதை பயணிக்கிறது. ஒரு 24 மணி நேரத்திற்குள் நடக்கும் சம்பவங்களினூடே பிளாஷ்பேக்காக விரியும் திரைக்கதை அற்புதம்.
நம்மூர்ல சொத்துப்பதுக்களை பங்குபோடுவதை விட அம்மாவின் பாசத்தை பங்குபோடுவதில் தான் சகோதர்ர்களுக்குள் சகோதரிகளுக்குள் ஒரு பெரிய போராட்டமே இருக்கும், இது கிட்டத்தட்ட அனைத்து குடும்பங்களிலும் இருக்கும். காலப்போக்கில், அவர்களுக்கும் திருமணமாகி குழந்தை குடும்பம் என்று ஆனபிறகு ஓரளவு தணியும்.
இந்தக்கதையில் கரிகாலனுக்கும் கோவலனுக்கும் இன்னும் திருமணமாகியிருக்காத நிலையில், அவர்களின் ஒரே அன்பு பரிமாற்றம் அம்மாவிடம் மட்டுந்தானே! அதனால், அந்த மோதலின் உச்சக்கட்டமாக அந்த ஒரு நாள் அமைந்துவிடுவதோடு, புதிய வாழ்க்கையின் தொடக்க நாளாகவும் மாறிவிடுகிறது. இயல்பாகவே, பெற்றோர்களை இழந்த நிலையில் அந்த வீட்டின் தலைமகனுக்கு ஒரு மரியாதையும் பொறுப்பும் கிடைக்கும் தானே!
இந்த விஷயத்தை மிகவும் அற்புதமாக, வியாசர்பாடி எளிய குடும்பத்தில் நடக்கும் பிரச்சினையாக, நாயகர்கள் நண்பர்கள் என்று நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் துவாரக் ராஜ.
அண்ணன் கரிகாலனாக லிங்காவும் தம்பி கோவலனாக ஆர் எஸ் கார்த்திக்கும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். லிங்காவை பொறுத்தவரை இத்தனை வருடங்கள் கொட்டிய உழைப்பின் பலனாக பரோல் படம் அமைந்திருக்கிறது. பக்கத்துவீட்டில் உடலுறவு மூச்சு கூட துல்லியமாக கேட்கும் அடுத்தடுத்த வீடுகள். அடுத்த நாள் அம்மா இறந்தது தெரியாது அதான்.. என்று சாரி கேட்கும் பக்கத்துவீட்டுக்காரனிடம், உனக்கு பெண்குழந்தைதான் பிறக்கும் ஆராயின்னு எங்கம்மா பேரை வைச்சுடு என்று யதார்த்தமாக சொல்லும் ஆர் எஸ் கார்த்திக், அண்ணனுக்கு பரோல் எடுக்கும் நீதிமன்ற காட்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்து பெயர் வாங்கிவிடுகிறார்.
பாலியல் சீண்டல்கள் என்றாலே அது பெண்குழந்தைகளுக்குத்தான் என்றில்லை, ஆண் சிறார்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை காட்சிப்படுத்திய விதம், அதனை வாலிபனாக லிங்கா , தனது காதலியிடம் சொல்லத்துணிந்து தோற்றுப்போகும் இடம் அத்தனையும் தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதியது.
நாயகிகளாக வரும் கல்பிகா, மோனிஷா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
விநோதினி வைத்யநாதன், பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். ஜலதோஷம் பிடித்திருப்பது போன்ற ஒரு உடல்மொழி, தனது Client கோவலனிடமும் நீதிபதிகளிடமும் அவர் காட்டும் உணர்ச்சிகள் என்று , பொன்னியின் செல்வன் – நந்தினியின் தோழியை விட அற்புதமான பாத்திரம் என்று சொல்லும் அளவிற்கு நடித்திருக்கிறார்.
கரிகாலன், கோவலன், தென்றல் , சேந்தன் அமுதன் அட்டா பெயர்களெல்லாம் தமிழில் அழகாக இருக்கிறதே என்று கேட்டபோது, 1980 களில் அந்தப்பகுதிக்கு சென்ற அன்றைய முதல்வர் மு.கருணாநிதி தான் அன்றைய காலகட்டத்தில் பிறந்த அப்பகுதி குழந்தைகளில் சிலருக்கு அப்படி பேர் வைத்த்தாக அறிந்தோம். அதே நேரம், அப்பகுதி மக்களின் வாழ்க்கைதரத்தை பரோல் உட்பட தொடர்ந்து வடசென்னையை மையமாக வைத்து வரும் படங்களில் பார்க்கும் போது,, “பேரு வைச்சியே சோறு வைச்சியா..?” என்று கேட்கும் நாகேஷின் வசனமும் நினைவுக்கு வருவது வேதனை.
பாசத்திலும், நேர்மையிலும், உழைப்பிலும், ஒழுக்கத்திலும் வட சென்னை இளைஞர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல, அவர்களுக்குள்ளும் அழகான வாழ்க்கை ஒளிந்துகிடக்கத்தான் செய்கிறது. பரோல், அந்த அழகான வாழ்க்கையின் சில பகுதிகளை அற்புதமாக காட்டியிருக்கிறது.