’மிரள்’ திரைப்பட விமர்சனம்

கணவன் மனைவியான பரத், வாணி போஜன் தங்களது மகனுடன் இரவு நேரத்தில் காரில் பயணம் மேற்கொள்கிறார்கள். காட்டுப்பகுதியில் திடீரென்று கார் பழுதாகி நின்றுவிடுகிறது. ஆள் நடமாட்டமே இல்லாத அந்த இடத்தில் திடீரென்று வரும் ஒருவர், இது ஆபத்தான பகுதி, என்று பரத்தை எச்சரித்துவிட்டு செல்ல, அடுத்த சில நிமிடங்களில் பரத் மற்றும் அவரது குடும்பம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறது. அந்த ஆபத்து என்ன? அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதை மிரட்டலாக சொல்வது தான் ‘மிரள்’

பரத் மற்றும் வாணி போஜன் இருவரும் முழு திரைப்படத்தையும் தோள் மீது சுமந்திருப்பதோடு, படம் முழுவதும் பயத்தோடு பயணித்து நம்மையும் அச்சப்பட வைக்கிறார்கள்.

ஒரு சாமாணிய மனிதருக்கு திடீரென்று ஒரு பிரச்சனை வந்தால் அவர் அதை எப்படி எதிர்கொள்வாரோ அப்படிப்பட்ட இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் பரத், எந்த இடத்திலும் ஹீரோயிஷத்தை காட்டாமல் அந்த கதாபாத்திரமாகவே படம் முழுவதும் பயணித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

10 வயது பையனுக்கு அம்மாவாக நடித்திருக்கும் வாணி போஜன், கதாபாத்திறத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார். பெண்கள் பலர் எதிர்கொள்ளும் பிரச்சனையால் பாதிக்கப்படும் வாணி போஜன், அதற்கான தீர்வாக எடுக்கும் முடிவு அதிரடியாக மட்டும் அல்ல பாராட்டும்படியும் உள்ளது.

வாணி போஜனின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அம்மாவாக நடித்திருக்கும் மீரா கிருஷ்ணன், பரத்தின் நண்பராக நடித்திருக்கும் ராஜ்குமார் என அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

காற்றாலை நிறைந்த காட்டுப்பகுதியில் நடக்கும் இரண்டாம் பாதி படத்தை பயத்தோடு பார்க்க வைத்ததில் பெரும் பங்கு ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலாவுக்கு உண்டு. இரவு நேர காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பவர் எந்த இடத்திலும் கிராபிக்ஸ் இல்லாமல் நம்மை மிரட்டியிருக்கிறார்.

இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். காட்சிகள் ஒரு பக்கம் மிரட்ட, பின்னணி இசை அதைவிட கூடுதலாகவே மிரட்டுகிறது.
இரண்டு மணி நேரம் நம் கவனம் முழுவதும் படத்துடன் ஒன்றிவிட செய்கிறார் படத்தொகுப்பாளர் கலைவாணன்.ஆர். என்ன நடக்கிறது? என்று புரியாமல் பயணிக்கும் பரத்தை போல், படம் பார்ப்பவர்களையும் பயத்துடன் படம் பார்க்க வைக்கிறது படத்தொகுப்பு.

எழுதி இயக்கியிருக்கும் எம்.சக்திவேல், திகில் படத்தை வித்தியாசமான கோணத்தில் கொடுத்ததோடு அதில் நல்ல மெசஜ் ஒன்றையும் சொல்லியிருக்கிறார். அதிலும், படத்தின் இறுதிக்காட்சியில் வைத்திருக்கும் ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.
பரத் மற்றும் வாணி போஜன் என இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரம் ரசிகர்களை கட்டிப்போட்டது போல் முழு படத்தையும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தியிருக்கும் இயக்குநர் எம்.சக்திவேல், எந்த இடத்திலும் தொய்வு ஏற்படமால் காட்சிகளை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.

முகமூடி அணிந்த நபர் யார்? எதற்காக இப்படி செய்கிறார்? என்ற கேள்வியோடு நடுநடுவே சில சந்தேகங்களையும் மனதில் எழுப்பும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் இறுதியில் ரகசியத்தை வெளிப்படுத்தும் இடம் மிரட்டல். அதிலும், பின்னணி காரணமாக சொல்லும் விஷயமும், அதற்கான தீர்வும் சபாஷ் சொல்ல வைக்கிறது.

மொத்தத்தில், ‘மிரள்’ மிரட்டல்.

ரேட்டிங் 3.5/5

Leave a Response